தூத்துக்குடி சாலை பெயர் பலகையில் இந்தி.. 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டிப் பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகே, திருச்செந்தூர் சாலை பிரியும் சாலையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்! என கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

பணியிடைநீக்கம்

சாலைகளில் உள்ள பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிதாக இந்தி இடம்பெற்றது குறித்து பல்வேறு விமர்சங்கள் எழுந்த நிலையில், இந்தி எழுத்துகளை அந்தப் பலகையில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய இருவர் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial