தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். பல இடங்களில் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்வெட்டு ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் மின்கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல்வர் விஜய் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமையகத்தில் மின் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதற்கு அடுத்த நாளில் அமைச்சர்கள் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் மின் தடை ஏற்பட்டது. இந்த நிகழ்வை பலரும் விமர்சித்தனர்.
இந்த சூழலில், மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியிருப்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக விமர்சனம்
இவ்விவகாரம் குறித்துத் திமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “த.வெ.க ஆட்சியில் மின்வெட்டே இல்லை என்று பொய் சொன்ன அமைச்சர்கள், இப்போது தொழிற்சாலைகளை ஜெனரேட்டர் பயன்படுத்தச் சொன்னதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நிர்வாகத் திறனின்மையால் தொழில்கள் முடங்குவதோடு விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சாடியுள்ள திமுக, நடிகர் விஜய்யின் நிர்வாக லட்சணம் தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது என்றும் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
நயினார் நாகேந்திரன் விமர்சனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புதிய ஆட்சி, சிறந்த நிர்வாகம் என வாய்ஜாலம் காட்டிய தவெக அரசால் அரசால், மின் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியவில்லை. ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும். தொழில்முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது.
எனவே, தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து, தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

