2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
தீவிர வாக்கு சேகரிப்பு
இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். பின்னர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தமிழக வெற்றி கழகம், எப்படியாவது இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.
கடும் எதிர்ப்பு
மதுராந்தகம் தொகுதியில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதே போல தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை வாக்கு சேகரிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தவிர, முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அமைச்சர்களின் செயல்பாடுகள் என பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. புதிதாக எந்த திட்டமும் கொண்டு வராததால் மக்களின் இந்த அதிருப்தி இடைத்தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

