செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: அரசு அளித்த உறுதி என்ன?

சென்னை எழும்பூரில் செவிலியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தங்களுக்கு வழங்கப்படும் தற்போதைய ஊதியம் போதுமானதாக இல்லை என்றும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் இரவு 8:30 மணியளவில் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனை கண்டித்து மற்ற செவிலியர்கள் சாலையில் அமர்ந்துவிட்டனர். இதனால் போலீஸூக்கும் செவிலியர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, செவிலியர் சங்க நிர்வாகிகள் சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்றுக்கொண்ட செவிலியர்கள், நவம்பர் 3-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நவம்பர் 3-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என செவிலியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial