இந்திய அரசியலில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வரும் அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தொடங்கிய அவரது அரசியல் பயணம், பின்னர் நாட்டின் பிரதமர் பதவி வரை சென்றது.
நரேந்திர மோடி 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குஜராத்தின் வாட்நகர் பகுதியில் பிறந்தார். இளம் வயதிலேயே சமூக மற்றும் அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 1987-ம் ஆண்டு குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
குஜராத் முதலமைச்சர் பதவி
2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். 2002-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட மத வன்முறை அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக அமைந்தது.
அவரது அரசின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தொடர்ந்தார். இதனால் நாடு முழுவதும் அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்தது.
மூன்று முறை பிரதமராக பதவியேற்ற பெருமை
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதன் மூலம் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவியேற்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்தது.
முக்கிய பொறுப்புகள்
2026-ம் ஆண்டு நிலவரப்படி, பிரதமர் பதவியுடன் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை, அணுசக்தித் துறை, விண்வெளித் துறை உள்ளிட்ட சில பொறுப்புகளையும் பிரதமர் மோடி நேரடியாக கவனித்து வருகிறார்.
பிரதமர் மோடி சந்தித்த முக்கிய சவால்கள்
2002-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட மத வன்முறை மோடியின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்தது. பிரதமராக பதவியேற்ற பிறகு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி, முதலீடு, கிராமப்புற வருமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று இந்தியாவுக்கு மிகப்பெரிய நிர்வாக மற்றும் பொருளாதார சவாலாக அமைந்தது. விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட சம்பவங்கள் மோடி அரசுக்கு எதிரான முக்கியமான அரசியல் சவால்களில் ஒன்றாக அமைந்தது.
25 ஆண்டுகள் நிறைவு
பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த அவர், அதன்பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார். இதன்மூலம் அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

