ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இது விமானப்படையின் வரலாற்றை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல. நாட்டின் வான்வெளியை பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் நாளாகவும் உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய விமானப்படையின் முதல் செயல்பாட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது. ஆறு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை வீரர்கள் இருந்தனர்.
1939-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, இந்தியாவின் பாதுகாப்பு தேவைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதன் பின்னர் இந்திய விமானப்படையின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. 941-ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விமானப் பயிற்சி மையங்கள் செயல்படத் தொடங்கின.
1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்திய விமானப்படை முக்கியமான வான் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பின்னர் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் விமானப்படையின் பங்கு மேலும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆயிரக்கணக்கான வான்வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரஃபேல், மிராஜ் 2000, மிக் 21, மிக் 27, மிக் 29, ஜாகுவார், சுகோய் 30 உள்ளிட்ட போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இருக்கின்றன. விமானப்படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் 60 தளங்கள் உள்ளன.
1932-ல் சிறிய அளவில் தொடங்கிய இந்திய விமானப்படை, இன்று பல்வேறு வகையான போர் விமானங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மிகப்பெரிய வான் சக்தியாக வளர்ந்துள்ளது. சிறிய அளவில் நான்கு விமானங்களுடன் தொடங்கிய அமைப்பு இன்று இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய தூண்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க : உலகமே கொண்டாடும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்தது என்ன?

