பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அக்டோபர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வாக்காளர் தினேஷ் தரப்பில் நடைபெற்ற வாதத்தில் முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதில், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் பன்ரூட்டியில் இருப்பதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் இடம்பெறவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்தது. அந்த சொத்து தொடர்பான சர்வே எண், விற்பனை பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 14-ம் தேதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

