ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிக் கோப்புகளை அடையாளம் காணும் SynthID Detector என்ற இணையக் கருவியை கூகுள் கொண்டுவந்துள்ளது. இதுவரை பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான சோதனைப் பயன்பாட்டில் இருந்த இந்தக் கருவியை இனி பொதுமக்களும் பயன்படுத்தலாம்.
ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் உண்மை எது? பொய் எது என பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழலில், கூகுள் உருவாக்கியுள்ள SynthID தொழில்நுட்பம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : 10,000 போலி கணக்குகள், ஏ.ஐ பாடல்கள் : ரூ.67 கோடி ஸ்ட்ரீமிங் மோசடி
எந்தெந்த கோப்புகளைச் சரிபார்க்கலாம்?
SynthID Detector பல்வேறு கோப்பு வடிவங்களை ஆதரிக்கிறது. படங்களுக்கு JPG, JPEG, PNG, BMP, WEBP, AVIF, HEIC, HEIF, TIFF, TIF மற்றும் GIF போன்ற வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
காணொளிகளுக்கு MP4, MOV மற்றும் WEBM ஆகிய வடிவங்களும், ஒலிக் கோப்புகளுக்கு WAV, MP3, OGG, FLAC, AAC மற்றும் M4A போன்ற வடிவங்களும் ஆதரிக்கப்படுகின்றன.
கருவியைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்றாலும், பயனர்கள் கூகுள், ஓப்பன்ஏஐ அல்லது ஆப்பிள் கணக்கின் மூலம் உள்நுழைய வேண்டியிருக்கும்.
ஓப்பன்ஏஐ, என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் ஆதரவு
ஓப்பன்ஏஐ, என்விடியா மற்றும் ககாவோ உள்ளிட்ட நிறுவனங்கள் SynthID-க்கு ஆதரவு வழங்குகின்றன. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களுக்கான ஆதரவும் விரைவில் வழங்கப்படும் என கூகுள் கூறியுள்ளது.

