கர்நாடகாவில் 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடக மாநிலம் முழுவதும் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 8) சோதனை நடத்தினர். மொத்தம் 45 ஆலைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 70 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை அரசு உணவு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஐஸ்கிரீம், பால், பால் பவுடர், சுவையூட்டும் பொருட்கள், சர்க்கரை, உணவுச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பிற மூலப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, ஐஸ்கிரீம் கஃபேயில் காலாவதியான பிஸ்கட், பால் மற்றும் பால் கோவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக மைசூரில் உள்ள ஜான் கேண்டி ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலையில் ரூ.20,000 மதிப்பிலான ஐஸ்கிரீம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

