பஞ்சாபில் விமான நிலையம் அருகே பறந்த ட்ரோன்கள் : விமான சேவைகள் நிறுத்தம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா ட்ரோன்கள் தாழ்வாக பறந்ததால் மூன்று பயணிகள் விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

விமான நிலையத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள், நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் மூன்று ட்ரோன்கள் தாழ்வாகப் பறப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வந்த விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது. மும்பையில் இருந்து வந்த விமானம் சண்டிகருக்குத் திருப்பிவிடப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து வந்த விமானம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

பலத்த சோதனைக்கு பிறகு, இரவு 10.30 மணிக்குப் பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது. விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், விமான நிலைய முனையத்தில் காத்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து, பஞ்சாப் காவல்துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இதேபோன்ற சம்பவம் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்துள்ளது. ஓடுபாதைக்கு அருகே ட்ரோன்கள் காணப்பட்டதாகச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, சுமார் 90 நிமிடங்களுக்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial