சென்னையில் 5 இடங்களில் பேருந்துகள் இயக்கம்., சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ்!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கத் தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. ஆயுத பூஜைக்கு 4 நாட்களில் மொத்தம் 14,963 பேருந்துகளும், தீபாவளிக்கு 3 நாட்களில் மொத்தம் 15,659 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 8,764 பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் நான்கு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளிக்கு 15,659 பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் இடம்பெறும்.

பண்டிகைக்குப் பிறகும் சிறப்புப் பேருந்துகள்

பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 9,191 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஒரே இடத்தில் பயணிகள் கூடுவதை தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் அருகிலுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம்

வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மறைமலை நகர் தற்காலிகப் பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமான திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை சேவைகளும் இங்கிருந்து இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கும் மறைமலை நகர் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கும் இடையே பயணிகள் செல்வதற்காகப் போதுமான இணைப்புப் பேருந்துகள் கட்டணமின்றி இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial