சென்னையில் புதிதாக 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாசர்பாடி பணிமனையிலிருந்து முதல் கட்டமாக 120 தாழ்தள மின்சாரப் பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டது. மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டன. இதில் 400 குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளும், 225 ஏசி பேருந்துகளும் அடங்கும்.
பயணிகளின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதம் ஆயிரம் 12 மீட்டர் தாழ்தள மின் பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது.
அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த டெண்டரை, மாநகர போக்குவரத்து கழகம் ரத்து செய்துள்ளது.

