ட்ரூகாலர் இனி தேவையில்லை? நவம்பர் 1 முதல் செல்போனில் வரப்போகும் புதிய வசதி!

இந்தியாவில் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் யாருடையது என்பதை அறிய உதவும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி நவம்பர் 1, 2026 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வருகிறது.

தெரியாத எண்களில் இருந்து மொபைலுக்கு அழைப்புகள் வரும்போது, அவை யாருடையது என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ட்ரூகாலர் (Truecaller) போன்ற செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இனி அதற்கு அவசியம் இல்லாத வகையில் புதிய வசதியைக் கொண்டுவர தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது ட்ரூகாலர் போன்ற செயலிகள், பயனர்கள் வழங்கும் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைப் பயன்படுத்தி அழைப்பவர்களின் பெயர்களைக் காட்டுகின்றன. இதற்கான வசதியை இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 4ஜி மற்றும் 5ஜி தொலைத்தொடர்பு இணைப்புகளில் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த வசதி நவம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், ஒருவர் தனது செல்போனில் சேமிக்காத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், அந்த எண் யாருடைய பெயரில் உள்ளது என்பதை பார்க்க முடியும்.

இந்தப் புதிய வசதி தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண உதவும். குறிப்பாக, வங்கிகள், நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளின் பெயரில் அழைப்பதாகக் கூறுபவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க இது கூடுதல் உதவியாக இருக்கும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial