தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்பக்க டிஜிட்டல் பெயர்ப்பலகையில் திமுக மற்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்ற விவகாரத்தில், 5 போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒரு வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதுச்சேரியில் இருந்து கடலூர் அரசு பேருந்தில் பின்பக்க டிஜிட்டல் பெயர்ப்பலகையில் திமுக குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றன. அதில், ‘எங்க உங்க அப்பாவையே காணோம்’ ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி’, ‘கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள்’ என்பதுபோன்ற வாசகங்கள் பெயர் பலகையில் இடம்பெற்றிருந்தன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், டிஜிட்டல் பெயர்ப்பலகைக்குச் செல்லும் மின்கம்பி துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அந்தச் சூழலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் சர்ச்சைக்குரிய வாசகங்களைப் பதிவு செய்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஒட்டுநர்கள் சித்திரைச்செல்வன், பரந்தாமன், நடத்துநர்கள் செந்தாமரை கண்ணன், வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 5 ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

