கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகம் : உள்ளே இத்தனை வசதிகள் இருக்கா?

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

பெரியார் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். இதைத்தொடர்ந்து நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்துக்கு 2024 நவம்பர் 6ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது முதலமைச்சர் விஜய் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

ரூ.300 கோடியில் உருவான பெரியார் அறிவுலகம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நஞ்சப்பா சாலையில், சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் 6.98 ஏக்கர் நிலத்தில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது.

புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட வளாகத்தில் நூலகம் மட்டுமின்றி, அறிவியல் மையம், குழந்தைகளுக்கான வாசிப்புப் பிரிவு, போட்டித் தேர்வுக்கான நூல்கள், மின்னணு நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

தளம் வாரியாக உள்ள சிறப்பம்சங்கள்

முதல் தளம்: வரவேற்பறை மற்றும் அறிவியல் கண்காட்சி தொடர்பான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது தளம்: குழந்தைகளுக்கான தனி நூலகம், சுயமாக அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கான வாசிப்புப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நூல்கள் இடம்பெறுகின்றன. நூலக நிர்வாகப் பிரிவும் இங்கு உள்ளது.

நான்காவது தளம்: தமிழ் நூல்கள், வரலாற்று நூல்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்கள்: ஆங்கில நூல்கள், ஆங்கிலம் கற்கும் வசதி மற்றும் புதிய தொழில் முயற்சிகளுக்கு உதவும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான வழிகாட்டல் மையம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஏழாவது தளம்: அறிவியல் மையம், மின்னணு நூலகம் மற்றும் விண்வெளி தொடர்பான காட்சிகளைப் பார்வையிடும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை கவரும் அறிவியல்

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி தொடர்பான தகவல்களை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோளிலும் மனிதர்களின் எடை எவ்வாறு மாறுபடும் என்பதை அறிந்துகொள்ள உதவும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வர்கள்வரை பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள், மின்னணு நூலக வசதிகள் என பல்வேறு வசதிகள் உள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial