தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சுமார் 8.30 சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, அஜித் நடித்த ஆசை, காதல் கோட்டை, வாலி, விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கானா பாடல்கள் மட்டுமின்றி மென்மையான காதல் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களிலும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இசை மூலம் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களுக்கு உயிர் கொடுத்த தேவா..!
கானா பாடல்களுக்கும் இனிமையான பாடல்களுக்கும் இசை அமைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். இவர் 1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமம் ஆகும்.
முக்கிய திரைப்படங்கள் மற்றும் விருதுகள்
தேவா இசையமைத்த திரைப்படங்களில் பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் அந்த படத்தில் வரும் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை, காதல் கோட்டை, வாலி, சிட்டிசன் உள்ளிட்ட படங்களுக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், குஷி உள்ளிட்ட படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியுள்ளார்.

