தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியையும் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அரசியல், திரையுலகம், தொழில்துறை மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு திருமணம்?
கிரீஸ் நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது. முதலில் செஷல்ஸ் நாட் டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்தக் காவ்யா மாறன்?
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட காவ்யா மாறன், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய தொழில் நிர்வாகியாக அறியப்படுகிறார். அவரது தந்தை கலாநிதி மாறன், சன் குழுமத்தின் தலைவராக உள்ளார்.
சன் தொலைக்காட்சி நிறுவனம் 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியை வாங்கியது. அந்த அணி 2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற பெயரில் விளையாடி வருகிறது. சன் குழுமம் தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. அவரது தாயார் காவேரி கலாநிதி மாறனும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளார்.
அனிருத் ரவிச்சந்திரன் திரை பயணம்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் பிரபலமானவர் அனிருத் ரவிச்சந்திரன். அதன்பின்னர் மாஸ்டர், விக்ரம், ஜெயிலர், லியோ உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து மேலும் பிரபலம் அடைந்தார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

