தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாராபுரம் இடைத்தேர்தலின்போது, வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள முயன்றுள்ளனர். முதலமைச்சர் விஜய் அந்தப் பகுதியில் சாலை வழிப் பயணம் மேற்கொள்ள இருந்ததால், அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கார்த்திகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.
கார்த்திகா கைது செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :-
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

