ஏஐ தொழில்நுட்பத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஸ்கைஃபால் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாம் பசுபாலக், பொறியியல் வடிவமைப்புப் பணிகளுக்காக SKY-001 என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளார்.
GPT-6 Astra உள்ளிட்ட முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு இணையாக அல்லது அவற்றைவிடச் சிறப்பாகச் செயல்பட்டதாக அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது, GPT-6 Astra-வை விட 150 மடங்கு குறைவான செலவில் செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
SKY-001 என்றால் என்ன?
SKY-001 என்பது பொறியியல் வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரி. இது கணினி உதவியுடன் வடிவமைக்கும் தொழில்நுட்பமான CAD மற்றும் BIM ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
GPT-6 Astra உடன் ஒப்பிடும்போது செலவு எவ்வளவு?
SKY-001 உருவாக்கிய சோதனை முடிவுகளை வெளியிட்ட சாம் பசுபாலக், சில முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைவிட வேகமாகவும் குறைந்த செலவிலும் செயல்படுவதாகக் கூறியுள்ளார். SKY-001 செலவு 0.005 அமெரிக்க டாலராகவும், GPT-6 Astra செலவு 0.75 அமெரிக்க டாலராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம் பசுபாலக் யார்?
சாம் பசுபாலக் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரைச் சேர்ந்த தொழில்முனைவோர். தற்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருகிறார். ஸ்கைஃபால் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2011ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் அரசியல் அறிவியல் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்பான முதுநிலைப் படிப்பை 2019ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஸ்கைஃபால் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கிய அவர், தற்போது பொறியியல் வடிவமைப்புப் பணிகளுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

