ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் சுண்டல் செய்து சாப்பிடுவது வழக்கம். கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பட்டாணி போன்ற பயறு வகைகளில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இருப்பினும், இவற்றைச் சாப்பிட்ட பிறகு சிலருக்கு வயிற்றில் வாயு, வயிறு உப்புசம், வயிறு கனமாக இருப்பது போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்.
சுண்டல் சாப்பிட்டால் ஏன் வாயுத் தொல்லை ஏற்படுகிறது?
சுண்டலில் நார்ச்சத்து அதிகம். திடீரென அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும்போது வாயு அதிகரிக்கும். கொண்டைக்கடலை உள்ளிட்ட பயறு வகைகளில் உள்ள சில கார்போஹைட்ரேட்டுகளைச் சிறுகுடல் முழுமையாகச் செரிக்காமல் போகலாம்.
இதனால் வயிறு உப்புசம், ஏப்பம், வயிற்றில் அழுத்தம், வாயு வெளியேறுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். ஒரே நேரத்தில் அதிக அளவு சுண்டல் சாப்பிடுவது, வேகமாகச் சாப்பிடுவது, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?
வாயு தொல்லை நீங்க என்ன சாப்பிடலாம்?
ஓம நீர்
வயிற்றில் வாயு சேர்வது மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க ஓம நீர் குடிக்கலாம். ஒரு கப் தண்ணீரில் கால் முதல் அரை தேக்கரண்டி ஓமம் சேர்க்கவும். 5–10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வடிகட்டி, மிதமான சூட்டில் குடிக்கவும். அதிகமாகக் குடித்தால் சிலருக்கு நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று எரிச்சல் ஏற்படலாம். எனவே அளவோடு குடிக்க வேண்டும்.
சோம்பு நீர்
சோம்பு விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். இது செரிமானப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று உப்புசத்தைக் குறைக்க உதவும். ஒரு கப் தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து 5–10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்னர் அதனை வடிகட்டி, மிதமான சூட்டில் குடிக்கவும்.
இஞ்சி நீர்
சிறிதளவு புதிய இஞ்சியை நறுக்கி ஒரு குவளை வெந்நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம். அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு இஞ்சி சில நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
வாயுத் தொல்லை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரே நேரத்தில் அதிக அளவு சுண்டல் சாப்பிடாமல் சிறிய அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கேஸ் அதிகமுள்ள குளிர்பானங்கள் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலையில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க : உங்களுக்கு முட்டை சாப்பிட பிடிக்குமா? இந்த விஷயத்தில் கவனமா இருங்க!

