புழல் சிறையில் இருந்து தப்பிய 2 கைதிகள்! 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு கைதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொரு கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாகப் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

தப்பி ஓடிய 2 கைதிகள் யார்?

புழல் மத்திய சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களில் ஒருவர் நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் போகதி (21) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த கைதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பிச் சென்ற மற்றொரு கைதி சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுதீப் போகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுரேஷைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத் துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆறு சிறைக் காவலர்கள் மற்றும் வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : காதலியை சந்திக்க செல்போன் டவரில் ஏறிய இளைஞர்.., அடுத்து நடந்த ட்விஸ்ட்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial