மின்சார ஸ்கூட்டர் மற்றும் கார்களைப் பயன்படுத்துவோர், வாகனத்தை ஓட்டிவிட்டு வந்தவுடன் உடனடியாக சார்ஜ் போடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் பேட்டரியின் வெப்பம் மேலும் அதிகரித்து, அதன் ஆயுளைப் பாதிக்கக்கூடும் என ஐஐடி மெட்ராஸ் எச்சரித்துள்ளது.
சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயக்கப்பட்ட ஒரு பெரிய பேட்டரியின் வெப்பநிலை 45 டிகிரியைத் தாண்டியதாக தெரிவித்துள்ளது. வெளிப்புற வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரும்போது, சில சூழல்களில் பேட்டரி தீப்பிடிக்கும் அபாயமும் இருக்கலாம் என்று பேராசிரியர் விளக்கியுள்ளார்.
வாகனத்தை இயக்கும்போது பேட்டரி ஏற்கனவே சூடாக இருக்கும். அந்த நேரத்தில் சார்ஜ் போட்டால் வெப்பநிலை மேலும் உயர்ந்து, அதன் செயல்திறனும் நீண்டகால ஆயுளும் பாதிக்கப்படலாம்.எனவே, வாகனத்தை ஓட்டிவிட்டு வந்தவுடன் உடனடியாகச் சார்ஜ் போடாமல் சிறிது நேரம் கழித்து சார்ஜ் போடுவது நல்லது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மின்கலத்தைச் சரியான முறையில் பராமரிப்பது முக்கியம். தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த சார்ஜரையே பயன்படுத்தவும். வெயிலில் நீண்ட நேரம் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.

