வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல், இன்று முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், சில இடங்களில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசியது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான காலப்பகுதியில் ஆந்திரப் பிரதேசம் – யானம் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்தது.
அர்னாப் புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம், விஜயநகரம், அனகாப்பள்ளி, ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பதிவானது. அதேபோல, ஒடிசா மாநிலத்தில், கோராபுட், கஞ்சம், கஜபதி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பதிவானது.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பாகவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில், ஒடிசாவில் மட்டும் 30,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலின் தாக்கம் காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவுக்குச் செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

