தமிழகத்தில் காணாமல் போகும் பள்ளி மாணவர்கள் – பெற்றோர்களே கவனம்..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஏழாம் வகுப்பு மாணவர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 12 வயது மாணவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவர், பின்னர் பயிற்சி வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், மாணவரைக் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருவண்ணாமலையில் மாயமான 3 மாணவிகள் சென்னையில் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு பகுதியில் இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது உறவுக்காரச் சிறுமி என மூன்று மாணவிகள் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவிகளைத் தேடினர். இந்நிலையில், மூன்று மாணவிகளும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மீட்கப்பட்டனர்.

ஈரோட்டில் 2 மாணவர்கள் மாயம்

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் ஸ்ரீதர், ஸ்ரீ லட்சுமணன் இருவரும் நேற்று பள்ளி முடிந்து டியூஷன் செல்வதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரம், வீடு திரும்பும் நேரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது எங்கு செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களுடன் வாகனங்களில் செல்ல வேண்டாம் என குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். குழந்தை காணாமல் போனது தெரியவந்தால், உடனடியாகக் காவல்துறையை அணுக வேண்டும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});