இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, 484 புற்றுநோய் மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றங்கள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.
மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காகப் பல குடும்பங்கள் அதிக அளவில் பணம் செலவிட வேண்டியுள்ள நிலையில், மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நோயாளிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விலைகள் என்ன?
புல்பிராக்கா ஊசி மருந்து: ஆர்.பி.ஜி. லைப் சயின்சஸ் நிறுவனத்தின் இந்த மருந்தின் விலை ரூ.26,072.16-ல் இருந்து ரூ.5,491 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டாப்ருமாப் ஊசி மருந்து: இதே நிறுவனத்தின் மருந்தின் விலை ரூ.22,031.25-ல் இருந்து ரூ.5,941 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெவாசிசுமாப் மருந்து: அபோட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இந்த மருந்தின் விலை ரூ.22,031.25-ல் இருந்து ரூ.5,930.13 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அனஸ்ட்ரோசோல் மாத்திரைகள்: மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த மருந்தின் 10 மாத்திரைகள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.695.76-ல் இருந்து ரூ.73 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அசாசிடிடின் ஊசி மருந்து: டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் இந்த மருந்தின் விலை ரூ.6,337-ல் இருந்து ரூ.1,495.04 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டசானத் 20 மாத்திரைகள்: டசாட்டினிப் மருந்தின் இந்தப் பிராண்டில் 60 மாத்திரைகள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.2,812.50-ல் இருந்து ரூ.1,085.93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

