துபாயில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு இந்தியாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக துபாய் சிறையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள தாத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஷி குமார் பாஸ்வான் (23). இவர், கடந்த 2025-ம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது வேலையை முறையாகத் தெரிவிக்காமல் விட்டுவிட்டு இந்தியா திரும்ப முயன்றதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயின் அல் ரஷிதியா பகுதியில் உள்ள சிறையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் இருப்பதாக அவரது தந்தை லாலன் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஷஷி குமார் பாஸ்வானின் சகோதரிக்கு கடந்த ஜூன் 26-ம் தேதி திருமணம் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். இந்தத் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஷஷி இந்தியா திரும்ப விரும்பியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தனது மகன் விரைவில் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார் என்று நம்பியதால், குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காத்திருந்ததாக லாலன் பாஸ்வான் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை மகன் வீடு திரும்பாததால் அவர் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்.

