தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பி ஓடினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர நடவடிக்கையால் தப்பி ஓடிய 17 கைதிகளும் பிடிபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்து விவாதத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

