தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 4 கிளைச்சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டச் சிறையில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தப்பியோடிய 17 கைதிகளையும் மீண்டும் பிடித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய சிறைத்துறை டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி சிறையில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்டச் சிறைகளின் பாதுகாப்பை பலப்படுத்த சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 22 கிளைச்சிறைகள் இருந்தன. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது 13 கிளைச்சிறைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மாவட்டச் சிறைகளிலும் காவலர்கள் பற்றாக்குறை நிலவுவதால், கிளைச்சிறைகளில் பணியாற்றும் காவலர்களை மாவட்டச் சிறைகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 4 கிளைச்சிறைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

