ஏன் கிரீன் ஸ்கிரீனில் வீடியோ எடுக்கிறார்கள்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு அறிவியலா?

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், செய்தி நிகழ்ச்சிகள் மற்றும் காணொளிகளில் நாம் பார்க்கும் பல காட்சிகள் உண்மையான இடங்களில் படமாக்கப்பட்டவை அல்ல. சில நேரங்களில் நடிகர்கள் ஒரு பச்சை நிறத் திரைக்கு முன்னால் நின்று நடிப்பார்கள். பின்னர் அந்தப் பச்சை நிறத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒரு காட்சியை வைப்பார்கள்.

எத்தனையோ கலர்கள் இருக்கும்போது ஏன் கிரீன் ஸ்கிரீனில் படம் எடுக்கிறார்கள்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்குப் பின்னால் மனிதக் கண்களின் பார்வைத் திறன், ஒளிப்பதிவு மற்றும் கணினித் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்புடைய அறிவியல் காரணங்கள் உள்ளன.

கிரீன் ஸ்கிரீன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ஒரு நடிகர் கிரீன் ஸ்கிரீனுக்கு முன்னால் நின்று படமாக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். படப்பிடிப்பு முடிந்த பிறகு, வீடியோ எடிட்டிங் சாப்ட்வேரில் அந்தப் பச்சை நிறம் மட்டும் தனியாக அடையாளம் காட்டும். பின்னர் அந்த நிறம் நீக்கப்பட்டு, அதற்கு தேவையான பின்னணிக் காட்சி இணைக்கப்படுகிறது. இந்த முறைக்கு குரோமா கீ (Chroma Key) என்று பெயர்.

உதாரணமாக, ஒரு செய்தி வாசிப்பாளர் பச்சைத் திரைக்கு முன்னால் நின்று வானிலைச் செய்தியை வாசிக்கும்போது, அவருக்குப் பின்னால் வானிலை வரைபடம் தெரிவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவர் அந்த வரைபடத்தின் முன்னால் நிற்கவில்லை. பச்சை நிறத்தை நீக்கி, அதன் இடத்தில் வரைபடத்தைப் பொருத்துவதன் மூலம் அந்தக் காட்சி உருவாக்கப்படுகிறது.

இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் திரைப்படங்களில் விண்வெளிக் காட்சிகள், கற்பனை உலகங்கள், கடலுக்கு அடியில் நடைபெறும் காட்சிகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

ஏன் பச்சை நிறம் மட்டும் அதிகமாகத் தேர்வு செய்யப்படுகிறது?

எத்தனையோ கலர்கள் இருக்கும்போது ஏன் பச்சை நிறத்தை தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

மனிதர்களின் தோல் நிறத்தில் பொதுவாகப் பச்சை நிறம் அதிகமாக இடம்பெறுவதில்லை. எனவே, பச்சை நிறப் பின்னணியில் ஒருவர் நிற்கும்போது, அவரையும் பின்னணியையும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் தனித்தனியாக எளிதாக அடையாளம் காண முடியும்.

பெரும்பாலான டிஜிட்டல் கேமராக்களில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை நிறங்களையும் பதிவு செய்யும் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், பச்சை நிறத்திற்கான சென்சார்கள் அதிகமாக இருக்கும். இதனால் பச்சை நிறம் தெளிவாகப் பதிவாகி, அதை தனியாகப் பிரித்தெடுப்பதற்கு உதவுகிறது.

திரைப்படங்களில் நடிகர்கள் பல்வேறு வண்ணங்களில் உடைகளை அணிவார்கள். குறிப்பாகப் பச்சை நிறத்தைத் தவிர மற்ற நிறங்களில் உடைகள் இருந்தால், பின்னணியையும் நடிகரையும் தனித்தனியாகப் பிரிப்பது எளிதாக இருக்கும்.

ஆனால், நடிகர் பச்சை நிறச் சட்டை அல்லது பச்சை நிற உடை அணிந்திருந்தால், பின்னணியை நீக்கும்போது அந்த உடையின் பகுதிகளும் மறைந்துவிடும். அதனால்தான் படப்பிடிப்புக்கு முன்பே நடிகர்களின் உடை நிறத்தையும் பின்னணித் திரையின் நிறத்தையும் கவனமாகத் தேர்வு செய்கிறார்கள்.

கிரீன் ஸ்கிரீன் என்பது வெறும் பச்சை நிறத் திரை மட்டுமல்ல. மனிதர்களையும் பின்னணியையும் நிறங்களின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்து, விரும்பிய காட்சிகளை உருவாக்க உதவும் ஒரு முக்கியமான திரைப்படத் தொழில்நுட்பமாகும்.

HTML tutorial