வார ராசிபலன் : நவம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரையிலான இந்த வாரம், 12 ராசிக்காரர்களுக்கும் வேலை, பணம், குடும்பம், காதல் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தரக்கூடியதாக இருக்கும் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தில் புதன் மற்றும் சுக்கிரன் நேர்கதியில் பயணிப்பதும், நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு மாறுவதும் முக்கியமான கிரக மாற்றங்களாகக் கருதப்படுகின்றன.
மேலும், சிம்ம ராசியில் செவ்வாய், குரு மற்றும் கேது இணைந்திருப்பதால் சிலருக்கு புதிய முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன தொழில் அல்லது வியாபாரப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் பேசும்போது முன்பைவிட தெளிவு கிடைக்கலாம்.
நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை ஒப்படைக்க வேண்டிய வேலைகளைச் சரியான நேரத்தில் முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். புதிய தொடர்புகள் மூலம் பயனுள்ள தகவல்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கல்வி மற்றும் படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் பழைய பிரச்சினை மீண்டும் பேசப்படலாம். துணையின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். வார இறுதியில் தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பணத்தைத் திட்டமிட்டுச் செலவிடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் நடுப்பகுதியில் வேலைப்பளு அதிகரிக்கலாம். ஏற்கெனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள், அறிக்கைகள் மற்றும் அலுவலகப் பணிகளை முடிப்பதற்கான சூழல் உருவாகும்.
அனுபவம் வாய்ந்த சக ஊழியர்கள் அல்லது ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கலாம். நவம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை தொழில் சார்ந்த பொறுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள் வரவு, செலவு மற்றும் பொருட்களின் இருப்பு விவரங்களைச் சரியாகக் கவனிப்பது அவசியம்.
குடும்பத்தில் வீடு தொடர்பான விஷயங்கள் மனதில் சில குழப்பங்களை ஏற்படுத்தலாம். அவசரமாக வீடு மாறுவது அல்லது பெரிய பொருட்களை வாங்குவது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். மாணவர்கள் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையிலும் படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்கெனவே முன்வைத்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கலாம். எழுத்து, வடிவமைப்பு, கற்பித்தல் மற்றும் நேர்காணல் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையலாம்.
வாரத்தின் தொடக்கத்தில் பணம் தொடர்பான சில தகவல்கள் முழுமையாகக் கிடைக்காமல் தாமதம் ஏற்படலாம். நவம்பர் 17ஆம் தேதிக்குப் பிறகு கல்வி மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் அதிகரிக்கலாம். முக்கியமான விஷயங்களைப் பேசும்போது வார்த்தைகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள். கோபத்தில் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது சமூக வலைதளப் பதிவு தேவையற்ற பிரச்சினையை உருவாக்கலாம்.
காதல் வாழ்க்கையில் பழைய கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்ய முயற்சி எடுக்கலாம். வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் மற்றும் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். சம்பள உயர்வு, தொழில் கட்டணம் அல்லது நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவது தொடர்பாகப் பேசுவதற்கான வாய்ப்பு உருவாகலாம். உங்களுடைய வேலை மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து வைத்திருப்பது நல்லது. தேவைப்படும் நேரத்தில் அவை உங்களது எதிர்பார்ப்புகளை எடுத்துரைக்க உதவும்.
பண விஷயங்களில் பேசும்போது அவசரப்பட வேண்டாம். குறிப்பாக சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நவம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை பகிரப்பட்ட செலவுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தொடர்பான வேலைகளில் கூடுதல் கவனம் தேவைப்படலாம்.
கல்வி மற்றும் கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தங்களது திறமையை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படலாம். வார இறுதியில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சவாலான பணிகளை எடுத்துச் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
இருப்பினும், சில நேரங்களில் அதிக உற்சாகத்துடனும் மற்ற நேரங்களில் ஆர்வம் குறைந்தும் செயல்படும் நிலை ஏற்படலாம். எனவே முக்கியமான பணிகளைத் திட்டமிட்டு முடிப்பது நல்லது. நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க முயற்சி செய்யுங்கள்.
நவம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு குடும்பம் மற்றும் வீடு தொடர்பான பொறுப்புகள் முக்கியத்துவம் பெறலாம். குடும்பத்தினருடன் பேசும்போது அலுவலகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது நல்லது. பண விஷயங்களில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடியுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் தொடர்பான நிலுவைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். குறிப்பாக பெற வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய பணம் மற்றும் நிதி ஒப்பந்தங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். வாரத்தின் தொடக்கத்தில் படிப்பு, விளக்கக்காட்சி மற்றும் படைப்பாற்றல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தலாம்.
சுக்கிரன் நேர்கதியில் பயணிப்பதால் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் காதல் உறவுகள் மீது கவனம் திரும்பலாம். துணையின் சிறிய குறைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. மறுபுறம், எதிர்பாராத செலவுகள் மற்றும் தனிப்பட்ட வேலைகள் அதிகரிக்கலாம். வார இறுதியில் துணை அல்லது சக ஊழியருடன் முக்கியமான உரையாடல் நடைபெறலாம். தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்றவாறு செலவுகளைத் திட்டமிடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு கிடைக்கலாம். வேலைக்கான நேர்காணல்கள், புதிய திட்டங்கள் மற்றும் முக்கியமான பேச்சுவார்த்தைகள் முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பான நட்பு வட்டாரங்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான சில வழிகள் கிடைக்கலாம். இருப்பினும் குழுவாகச் செயல்படும்போது யாருக்கு என்ன பொறுப்பு, யாருக்கு என்ன அங்கீகாரம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாரத்தின் தொடக்கத்தில் குடும்பப் பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். நவம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை கல்வி மற்றும் காதல் வாழ்க்கை கவனத்தை ஈர்க்கலாம்.
பயணம், வசதி மற்றும் உறவுகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். முக்கியமான பணிகளை ஏற்றுக்கொண்டு திறமையை வெளிப்படுத்தும் சூழல் அமையலாம்.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டால், அதற்குத் தேவையான அதிகாரமும் வசதிகளும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நவம்பர் 16ஆம் தேதி மாலை சூரியன் உங்கள் ராசிக்கு மாறுவதால் தனிப்பட்ட அடையாளம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கலாம். மேலதிகாரிகளிடம் உங்களது பணிகளை எடுத்துரைக்க இது உதவியாக இருக்கலாம்.
சக ஊழியர்கள் மற்றும் தொழில் தொடர்பான நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்ப விஷயங்களுக்கும், இறுதிப் பகுதியில் கல்வி மற்றும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வருவதற்கு முன்பே பெரிய செலவுகளைச் செய்வதைத் தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பழைய தொழில் கூட்டாண்மை அல்லது வருமானம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் தொடர்பான நண்பர்கள் மற்றும் அறிமுகங்கள் மூலம் புதிய உதவிகள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களது செயல்பாடு மற்றும் அணுகுமுறை மற்றவர்களின் கவனத்தைப் பெறும்.
வாரத்தின் தொடக்கத்தில் குடும்பச் செலவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நவம்பர் 17ஆம் தேதிக்குப் பிறகு முக்கியமான செய்திகள், விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கலாம். ஆசிரியர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பரிசீலிப்பது நல்லது.
வார இறுதியில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். பயணம் மற்றும் தனிப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தும்போது உங்களது சக்திக்கு மீறிய பொறுப்புகளை ஏற்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் நிதி சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறலாம். எதிர்பார்க்கும் பணம், செலவுகள் மற்றும் புதிய நிதி உதவிகள் தொடர்பாகத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாகலாம். தேவையான இடங்களில் பிறரிடம் உதவி கேட்பதில் தயக்கம் காட்ட வேண்டாம். அதே நேரத்தில் உங்களிடம் நம்பிக்கை வைத்து ஒப்படைக்கப்படும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவது அவசியம்.
வாரத்தின் முழுவதும் முக்கியமான உரையாடல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். வார இறுதியில் வீட்டிலிருந்து நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கு நேரம் ஒதுக்கலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு நிதானமான திட்டமிடல் உதவியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்கள் முக்கியமாக இருக்கலாம். செவ்வாய் மற்றும் குருவின் கிரக அமைப்பு கூட்டாண்மை மற்றும் உறவுகள் சார்ந்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.
உங்களது உறவுகள் தொழில் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. வாரத்தின் நடுப்பகுதியில் வரவு செலவு கணக்குகளைச் சரிபார்க்க ஏற்ற நேரமாக இருக்கலாம். வார இறுதியில் காலக்கெடு உள்ள வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
பிறருடன் இணைந்து செயல்படும்போது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் தொழில் பொறுப்புகளுக்கும் இடையில் சமநிலையைப் பராமரிப்பது அவசியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலுவலகத்தில் சவாலான பொறுப்புகள் கிடைக்கலாம். போட்டி மற்றும் வேலைப்பளு அதிகரித்தாலும், திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பணிகளைச் சமாளிக்க முடியும். குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதை தனிப்பட்ட பிரச்சினையாக மாற்ற வேண்டாம். பழைய நிதிக் கணக்குகள் அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துள்ள பணம் தொடர்பான விவகாரங்களைத் தீர்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கலாம்.
வாரத்தின் தொடக்கத்தில் தொழில் தொடர்பான நண்பர்களின் உதவி கிடைக்கலாம். நவம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை செலவுகள் மற்றும் தனிப்பட்ட வேலைகளில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கலாம். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்கெனவே தீர்க்கப்படாமல் இருக்கும் விஷயங்களைப் பேசித் தெளிவுபடுத்த முயற்சி செய்யுங்கள்.
நவம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் உங்களது அடுத்தகட்டத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற வகையில் செயல்படுவது நல்லது.

