இரவு உணவுக்குப் பிறகு ஏதாவது இனிப்பு சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான பழக்கம். குறிப்பாக பண்டிகை நாட்களில் லட்டு, ஜிலேபி, குலாப் ஜாமூன் போன்ற இனிப்புகளைச் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்வது வழக்கமாக இருக்கும். ஆனால், இனிப்பு சாப்பிட்ட பிறகு பல் துலக்காமல் அப்படியே தூங்குவது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
ஒரு நாள் பல் துலக்காமல் தூங்கிவிட்டால் உடனடியாகப் பற்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தப் பழக்கம் அடிக்கடி தொடரும்போது பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இனிப்பால் பற்களில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?
நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சர்க்கரையை வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பயன்படுத்தி அமிலங்களை உருவாக்குகின்றன. இந்த அமிலங்கள் பற்களின் வெளிப்புறப் பாதுகாப்பு அடுக்கான எனாமலைத் தொடர்ந்து தாக்குகின்றன.
இவ்வாறு அடிக்கடி அமிலத் தாக்குதல் ஏற்படும்போது பற்களின் எனாமல் படிப்படியாக வலுவிழக்கலாம். இதனால் பல் சொத்தை உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பது குறைகிறது. பொதுவாக உமிழ்நீர் வாயில் இருக்கும் உணவுத் துகள்களை அகற்றவும், அமிலத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் தூக்கத்தின்போது உமிழ்நீர் குறைவதால் பற்களுக்குக் கிடைக்கும் இயற்கையான பாதுகாப்பும் குறைகிறது. இதனால் இரவில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் தூங்குவது பற்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இனிப்புகளைச் சாப்பிடுவதையே நிறுத்த வேண்டுமா?
இனிப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு அடிக்கடி சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். உணவு சாப்பிடும் நேரத்திலேயே இனிப்புகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. நாள் முழுவதும் அவ்வப்போது இனிப்புகளைச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ள இனிப்புகள் நீண்ட நேரம் அங்கேயே தங்கிவிடலாம். அதேபோல் சர்க்கரை அதிகமுள்ள பானங்களை அடிக்கடி குடிப்பதும் பற்கள் சர்க்கரையைச் சந்திக்கும் நேரத்தை அதிகரிக்கிறது.
இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வாயில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களைக் குறைக்க உதவும். அதைவிட முக்கியமாக, இரவு தூங்குவதற்கு முன்பு பல் துலக்கும் பழக்கத்தைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

