திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் DJ இசை முக்கிய இடம்பிடித்துள்ளது. சில இடங்களில் ஒலிபெருக்கிகளின் சத்தம் அளவுக்கு அதிகமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற அதிகப்படியான சத்தம் காதுகளை மட்டும்தான் பாதிக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது இதயத்தின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கிறது.
அதிக சத்தம் கேட்கும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?
திடீரென காதைப் பிளக்கும் அளவுக்கு சத்தம் கேட்கும்போது, நமது மூளை அதை ஒரு ஆபத்தாக எடுத்துக்கொள்ளக்கூடும். இதனால் உடலில் இயற்கையான எச்சரிக்கை எதிர்வினை உருவாகிறது. அந்த நேரத்தில் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதனால், இதயத் துடிப்பு வேகமடையலாம். ரத்த நாளங்கள் சுருங்குவதால் ரத்த அழுத்தமும் உயரலாம்.
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், இதயத் தமனி அடைப்பு அல்லது இதயத் துடிப்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இது மட்டுமல்ல, வாகனங்களின் தொடர்ச்சியான ஹாரன் சத்தம், கட்டுமானப் பணிகளின் இரைச்சல், அதிக ஒலியில் இசை ஒலிப்பது போன்றவை உடலில் தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
யாரெல்லாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்?
ஏற்கெனவே இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், இதயத் துடிப்பு பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோர் அதிக சத்தம் நிறைந்த சூழலை தவிர்க்க வேண்டும். அதிக சத்தம் கேட்ட பிறகு இதயத் துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருப்பது, நெஞ்சு அசௌகரியம், மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
காதுகளுக்கு ஏற்படும் ஆபத்து
DJ இசையைக் கேட்ட பிறகு சிலருக்குக் காதுக்குள் ரீங்காரம், விசில் சத்தம், முணுமுணுப்பு அல்லது மணி அடிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும். அதிக சத்தம், நமது உள் காதில் இருக்கும் செல்களைச் சேதப்படுத்தலாம். மனிதர்களிடம் இவை இயல்பாக மீண்டும் வளர்வதில்லை. எனவே கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் நிரந்தர செவித்திறன் இழப்பு ஏற்படலாம்.

