இனி காத்திருக்க வேண்டாம்..PF கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்

PF சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தற்போது சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற EPFO-வின் மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், PF பணத்தைப் பெறுவதற்கான புதிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களுடைய PF சேமிப்புத் தொகையை ஒரே நேரத்தில் முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் Systematic Withdrawal Plan (SWP) என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஓய்வுபெற்றவர்கள் தங்களுக்குத் தேவையான தொகையை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எனப் பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகும். மீதமுள்ள பணம் PF கணக்கில் தொடர்ந்து இருக்கும் என்பதுடன், அதற்கான நடைமுறையில் உள்ள வட்டி வருவாயும் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்டத்தில் 55 வயதைக் கடந்த, PF கணக்கில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாகச் சேமிப்பு வைத்திருக்கும் சுமார் 6.32 லட்சம் சந்தாதாரர்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக EPFO தெரிவித்துள்ளது.

PF தொகையில் 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், தற்போது அந்த வரம்பு 90 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. முன்பு 25 சதவீதமாக இருந்த குறைந்தபட்ச இருப்பு தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வேலையிழந்த பிறகு PF கணக்கிலிருந்து முழுமையான பணத்தைப் பெறுவதற்கு முன்பு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அதனை இரண்டு மாதங்களாகக் குறைக்க EPFO ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வேலை இழந்த ஊழியர்கள் விரைவாக PF பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
கிக் தொழிலாளர்களுக்கும் PF திட்டம் விரிவாக்கம்!

இதுமட்டுமின்றி, பாரம்பரியமான சம்பளப் பட்டியல் முறையின் கீழ் வராத கிக் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களையும் PF சேமிப்புத் திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக UAN கணக்குடன் நேரடியாகத் தொடர்புடைய தன்னார்வப் பங்களிப்பு வசதியை உருவாக்கவும், மூன்றாம் நபர்கள் மூலம் சிறிய அளவிலான தொகைகளைச் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial