தவெக எம்.எல்.ஏ. மீது புகார்.., விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் தலைவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கும் இடையிலான விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கைது செய்ய வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மாவட்ட ஆட்சியர் துணிச்சலுடன் புகார் அளித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பெண் மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தப் பிரச்சனை ஆரம்பத்திலேயே அரசின் கவனத்திற்குச் சென்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிக்கு ஆதரவாக அரசு நின்றிருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கும்? எனவே அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்வி!

திமுக எம்.பி. கனிமொழியும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஆரம்பத்திலேயே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் எம்.எல்.ஏ. என்பதற்காக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யக்கூடாது என்றும், முதலமைச்சர் விஜய் இனியாவது உரிய நடவடிக்கை எடுப்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் விமர்சனம்!

மாவட்ட ஆட்சியர் புகாரில் இதுவரை அரசு எடுத்த நிலைப்பாடு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகாரில் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்றும், பெண் அதிகாரிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை சொன்னது என்ன?

இந்த விவகாரம் குறித்து ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் கருத்து தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி தொடர்பாகவே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலையீடுகள் இல்லாமல் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

HTML tutorial