நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று காலை ‘சேமியா கிச்சடி’ வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீரென கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்ட 14 மாணவர்களையும் மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது, மாணவர்களின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில், நாமக்கல்லில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் : தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடும் நெருக்கடி

