சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு நேரத்தில், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் இளைஞர்கள் பைக்கில் அதிவேகமாக சென்றனர். இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பதிவு எண் இல்லாமல் ஓட்டிய 56 வாகனங்கள் என மொத்தம் 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் பைக் சாகசம் என்ற பெயரிலும், பைக் ரேஸ் என்ற பெயரிலும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

