பிரான்சில் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 400 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் போராட்டம் ஏன்?
பள்ளிகளில் ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதது, வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள் உள்ளிட்ட கல்வி சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கான அழைப்புகள் சமூக வலைதளம் மூலம் வேகமாகப் பரவியதால் மாணவர்களின் போராட்டம் நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவடைந்தது.
400 பள்ளிகள் மூடல்
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் கல்வி அமைச்சர் எட்வார்ட் ஜெஃப்ரே வெள்ளிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவித்தார். போராட்டம் தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இரண்டு உயர்நிலைப் பள்ளிகளில் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான பெல்ஜியத்திலும் தாக்கம்
பிரான்சில் மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம், அண்டை நாடான பெல்ஜியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெல்ஜியத்தின் லீஜ் நகரில் உள்ள சில உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த நகரில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : உலகமே கொண்டாடும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்தது என்ன?

