மின்சார வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான கியா(Kia), தனது அடுத்த தலைமுறை மின்சார வணிக வாகனமான ‘PV7 எலக்ட்ரிக் வேனை’ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வணிக ரீதியான சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் பயன்பாடு என இரண்டு விதமான தேவைகளுக்கும் ஏற்ப இது சந்தைக்கு வருகிறது.
புதிய கியா PV7 நவீன வடிவமைப்புடன், முன்பக்கத்தில் தனித்துவமான C-வடிவ LED விளக்குகள் மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த வேன் 5,350 மி.மீ நீளமும், 1,995 மி.மீ அகலமும், 1,990 மி.மீ உயரமும் மற்றும் 3,500 மி.மீ வீல்பேஸும் கொண்டது. இது சொகுசு வேன்களுக்கு நிகரான இடவசதியை வழங்குகிறது. இன்டீரியரைப் பொறுத்தவரை, 11 இருக்கைகள் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும் 7 சீட்டர் மாடலில் இருக்கைகளைக் கழற்றி மாட்டும் வசதி உள்ளதால் கூடுதல் லக்கேஜ் இடைவெளியைப் பெற முடியும்.
கியா PV7 மின்சார வேன் 71.5 kWh மற்றும் 96.2 kWh என இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 268 எச்பி பவரையும் 420 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
800V அதிநவீன சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த வாகனத்தை, ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் வெறும் 25 நிமிடங்களில் 10%-லிருந்து 80% வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
ஜெர்மனியில் நடைபெறவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் இந்த கியா PV7 எலக்ட்ரிக் வேன், 2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொரியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

