HomeSpecial Airtcleவெறும் 8 வினாடிகளில் மறையும் சூரியன்: நாசா விண்வெளி வீரர் பகிர்ந்த வீடியோ

வெறும் 8 வினாடிகளில் மறையும் சூரியன்: நாசா விண்வெளி வீரர் பகிர்ந்த வீடியோ

நாசாவின் மூத்த விண்வெளி வீரரான டான் பெட்டிட், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அரிய சூரிய அஸ்தமன வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். விண்வெளியில் சூரியன் மறையத் தொடங்கி முழுமையாக மறையும் வரையிலான ஒட்டுமொத்த நிகழ்வும் வெறும் 8 வினாடிகளுக்குள் முடிந்துவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் சூரியன் இவ்வளவு வேகமாக மறைவதற்குக் காரணம் சர்வதேச விண்வெளி நிலையம் பயணிக்கும் அதிவேகம் தான். விண்வெளி நிலையம் மணிக்கு சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இதனால் வெறும் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை அது பூமியை ஒருமுறை முழுமையாக வலம் வந்துவிடுகிறது.

இந்த அதிவேகப் பயணத்தின் காரணமாக, அங்குள்ள விண்வெளி வீரர்கள் 24 மணி நேரத்தில் 16 முறை சூரிய உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனத்தையும் நேரில் பார்க்கிறார்கள். “வெறும் 8 வினாடிகளில் சூரியன் மறைந்துவிட்டாலும், ஒரு நாளைக்கு 16 முறை இந்த அழகைக் காணும் வாய்ப்பு கிடைப்பது அந்த குறையை நிவர்த்தி செய்துவிடுகிறது” என்று டான் பெட்டிட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இந்த அழகிய தருணத்தை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்வது அத்தனை எளிதான காரியம் அல்ல என்றும் அவர் விளக்கியுள்ளார். விண்வெளியில் வளிமண்டல அடுக்குகள் குறைவாக இருப்பதால், சூரிய மறைவின் போது ஒளியின் தீவிரம் மிக வேகமாக மாறும். இந்த சவால்களையும் மீறி அவர் எடுத்துள்ள டைம்லேப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments