HomeTamilnaduTN Budget 2026: மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் முதல் லேப்டாப் வரை… பள்ளி, கல்லூரிகளுக்கான முக்கிய...

TN Budget 2026: மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் முதல் லேப்டாப் வரை… பள்ளி, கல்லூரிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026–27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், தொழில்நுட்பக் கல்வி, செயற்கை நுண்ணறிவு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிக்கல்விக்கான முக்கிய அறிவிப்புகள்

பள்ளிகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் செயல்படுத்த ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு

மாநிலம் முழுவதும் 3,734 அரசு பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ரூ.2,132 கோடி செலவிடப்பட உள்ளது.

தரமான கல்வியை வழங்கும் நோக்கில், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய சிறப்பு பள்ளிகளும் அமைக்கப்பட உள்ளன. மாணவர் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

தற்போது செயல்பாட்டில் உள்ள பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம், இனி 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம்

கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்றும் பணிக்காக ரூ.10 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.

பாடத்திட்ட மாற்றம் மற்றும் AI திறன் பயிற்சி

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படும் என்றும், கற்றல் திறனில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் இலக்குடன் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2031-க்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு மேம்பாடு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்கள் வெல்லும் நோக்கில், மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.50 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறைக்கான மொத்த ஒதுக்கீடு

2026–27 நிதியாண்டில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி கல்வித் துறையின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments