பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் 13 வயது மகன் மரக்காணம் அருகே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் தியோ ஆழிசை (13), விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து வந்துள்ளார். அங்கிருந்து மரக்காணம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நாளில், வழக்கம்போல் பள்ளிக்கு தயாராகுமாறு குடும்பத்தினர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவன் வீட்டின் பின்புறம் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் தாத்தா மற்றும் பாட்டி தேடி சென்றனர்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத மனநிலையில் சிறுவர் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
