கேரள நீதித்துறை அகாடமி மற்றும் தேசிய மேம்பட்ட சட்டப் பல்கலைக்கழகம் (NUALS) இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில், காப்புரிமை, டிஜிட்டல் தளங்கள், AI தொழில்நுட்பம், இசைத் துறை, சினிமா மற்றும் படைப்பாளிகளின் உரிமைகள் தொடர்பான பல்வேறு சமகால சட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சட்ட நிபுணர்கள், நீதித்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் கலைத் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் காலத்தில் உருவாகும் புதிய சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கேரள முதல்வர் வி.டி. சதீசன் பேசுகையில், திரைப்படத் துறையை பாதித்து வரும் இணையத் திருட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உருவாக்கி வரும் புதிய சவால்களை எதிர்கொள்ள தற்போதைய சட்டங்களில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
கலை, கலாசாரம் மற்றும் சட்டம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் படைப்பாளிகளின் உரிமைகள் பாதுகாப்புக்கும் வலுவான சட்ட அமைப்பு அவசியம் என கூறினார்.
திரைப்படங்கள் உருவாகும் பின்னணியில் மிகப்பெரிய முதலீடு, நீண்டகால உழைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. ஒரு படம் வெளியாகும் சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் பரவுவது தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில், தற்போதுள்ள காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் நடைபெறும் சட்டவிரோத உள்ளடக்கப் பகிர்வை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சினிமா துறையை தலைகீழாக மாற்றும் AI? ராம் கோபால் வர்மா சொன்ன பரபரப்பு தகவல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று இசை, புகைப்படம், வீடியோ மற்றும் பல்வேறு கலை வடிவங்களை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதே நேரத்தில் சில ஆபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக Deepfake தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் போலி படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவுவது அதிகரித்து வருகிறது. இது தனிநபர் உரிமைகள், மற்றும் சமூக நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த புதிய தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க சட்ட அமைப்புகளும் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
AI தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் உரிமை யாருக்கு சொந்தம் என்ற விவாதம் உலகளவில் நடைபெற்று வருகிறது. இசை, சினிமா மற்றும் டிஜிட்டல் கலைப் படைப்புகளில் மனிதர்களின் படைப்பாற்றல் எந்த அளவுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
கருத்தரங்கில் பேசிய கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேசியதாவது:- “சட்டம், இசை மற்றும் சினிமா ஆகியவை வெளிப்படையாக வேறுபட்ட துறைகளாக தோன்றினாலும், மனித உணர்வுகள் மற்றும் சமூக வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையவை. கலை மனிதர்களின் அனுபவங்களை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், அவற்றை பாதுகாக்கவும் ஒழுங்குபடுத்தவும் சட்டம் செயல்படுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

