திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சினிமாவின் எதிர்காலம் குறித்து வெளியிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராம் கோபால் வர்மா கூறுகையில், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆயிரக்கணக்கான AI ஏஜென்ட்கள் ஒருங்கிணைந்து திரைப்படத் தயாரிப்பில் செயல்படக்கூடிய நிலை உருவாகலாம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது AI திரைக்கதை எழுதுதல் அல்லது காட்சிகளை உருவாக்குதல் போன்ற தனிப்பட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் ஒரே கதைக்கான பல்வேறு பதிப்புகளை AI உருவாக்கி, அவற்றை தரம், கதாபாத்திர ஆழம், உணர்ச்சி தாக்கம் மற்றும் கதை முன்னேற்றம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் திறன் பெறும் என அவர் கூறியுள்ளார்.
இன்றைய திரைப்படத் தயாரிப்பில் நடிகர்களின் கால்ஷீட், படப்பிடிப்பு இடங்கள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன. இந்த காரணமாக சில சமயங்களில் கதை அல்லது காட்சிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்த வகையான நடைமுறை சிக்கல்கள் குறையக்கூடும் அதனால் படைப்பாளர்கள் தங்களது கற்பனையை திரையில் கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படத் துறையில் எடிட்டிங், கலர் கிரேடிங், விஷுவல் எஃபெக்ட்ஸ், சவுண்ட் மிக்சிங் போன்ற பணிகள் நடைபெற சில மாதங்கள் கூட ஆகும். ஆனால் எதிர்காலத்தில் இந்த பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த செயல்முறையாக மாறக்கூடும். இதன் மூலம் திரைப்படங்களை குறுகிய காலத்தில் முடித்து வெளியிடும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
படத்தில் பிரம்மாண்டமான செட்கள் மற்றும் வெளிநாட்டு லொக்கேஷன்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகிறது. ஆனால் AI தொழில்நுட்பம் வளர்ந்தால், உயர்தர காட்சிகளை உருவாக்குவதற்கான செலவுகள் கணிசமாக குறையக்கூடும். இதனால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவிலான காட்சிகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
AI மூலம் உயர்தர காட்சிகளை உருவாக்குவது எளிதாகிவிட்டால், பார்வையாளர்களை கவர்வது வெறும் காட்சி பிரம்மாண்டத்தால் மட்டுமே சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, எந்த கதையை சொல்ல வேண்டும், அதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற படைப்பாற்றல் முக்கியத்துவம் பெறும். தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாறினாலும், தனித்துவமான சிந்தனை மற்றும் ரசனை மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.
AI தொழில்நுட்பத்தின் உதவியால் எதிர்காலத்தில் ஒரே திரைப்படத்தின் பல்வேறு பதிப்புகளை வெவ்வேறு பார்வையாளர்களுக்காக வழங்கும் வாய்ப்பும் உருவாகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

