2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை
இந்த இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இடைத்தேர்தலில் வெற்றி
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 67,819 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 48,516 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் 43,233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அடுத்தபடியாக, தாராபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்த வெற்றியை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
த.வெ.க.வின் பலம் அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியானது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. தற்போது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றுள்ளதால் சட்டமன்றத்தில் த.வெ.க.வின் பலம் 110 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : திமுக பரப்பிய அவதூறுகளை இடைத்தேர்தல் முறியடித்துள்ளது : அமைச்சர் ஷாஜகான் பேட்டி

