கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் தலைமை, கட்சி நிர்வாகம் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
அதிமுக வேட்பாளர்கள் தோல்வி
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதே தொகுதியில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பல எதிர்ப்புகளை தாண்டி இடைத்தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தது கட்சிக்குள் மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா இன்று பதவியேற்பு
அதிமுக தலைமை மீது அதிருப்தி
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறை, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைவர்கள் மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
அதிமுகவை பலவீனப்படுத்த முடியாது
இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாவிட்டாலும், 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியே உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை அழிப்போம் என வந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்டவை ஓய்ந்து போயுள்ளன. இதேபோலத்தான் த.வெ.க.வால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
அதிமுகவின் நிலை வேதனைக்குரியது – கடம்பூர் ராஜூ வேதனை
முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க இருந்தபோது தோல்வியைக் காணாத இயக்கமாக இருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார். கடந்த 2021-ல் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தது. 2026-ல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது அந்தக் கட்சி இன்று மழுங்கி, மங்கி விட்டது என பேசியுள்ளார்.
தலைமையை மாற்ற வேண்டும் – எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் அதிரடி
எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் கூறியதாவது, “த.வெ.க அரசிற்கான ஆதரவு நிலைப்பாடு காரணமாக பிரிந்திருந்த எஸ்.பி. வேலுமணி மீண்டும் இணைந்தபிறகும் அவருக்கு முக்கித்துவம் கொடுக்கவில்லை. எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தான் மட்டுமே பெரிய தலைவர் என இருக்கிறார். மற்றவர்கள் கூறுவதை எதையும் அவர் கேட்பதில்லை. கட்சி தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என கூறுபவர்களை, கட்சியில் இருந்து நீக்குகிறாரே தவிர வேறு எதையும் செய்வதில்லை. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தோல்வியடைந்து வருகிறது. கட்சியின் பொதுக்குழுவை கூட்டி எஸ்.பி. வேலுமணி போன்ற ஒருவரை பொதுச்செயலாளராக்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி, த.வெ.க-வில் இணைய வேண்டிய சூழல் ஏற்படும்” என்றனர்.

