மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இடைத்தேர்தல்
இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மதுராந்தகம் தொகுதியின் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மரகதம் குமரவேல், சத்தியபாமா பதவியேற்பு
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்டசபையில் அக்கட்சியின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.
தவெக வின் பலம் உயர்வு
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர் இடங்கள் உள்ளன. தி.மு.க. 59. அ.தி.மு.க. 41, காங்கிஸ் 5, பா.ம.க 4. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். ஐ.யூ.எம்.எல், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும் பா.ஜனதா, தே.மு.தி.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடங்களும் உள்ளன.
இடைத்தேர்தலுக்கு முன்பு 7 தொகுதிகள் காலியாக இருந்ததால், உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பலம் 107-ல் இருந்து 109 ஆக உயர்ந்தது.

