இரவில் நாம் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென உயரத்திலிருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படும். அப்போது உடல் திடுக்கிட்டு அசைவதுடன், தூக்கத்திலிருந்து சட்டென்று விழித்துக்கொள்வதும் உண்டு.
மருத்துவத்தில் இதனை ‘ஹிப்னிக் ஜெர்க்’ (Hypnic Jerk) என்று குறிப்பிடுகின்றனர். தூக்கம் தொடங்கும் நிலையில் தசைகள் திடீரெனச் சுருங்குவதால் இந்த அசைவு ஏற்படுகிறது. தூக்கமின்மை, மன அழுத்தம், அதிகப்படியான கஃபீன் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் இது நிகழும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : இரவில் படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!
நாம் விழித்திருக்கும் நிலையிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும்போது, உடல் படிப்படியாகத் தளரத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தின் போது சிலருக்கு திடீரெனக் கை, கால் அல்லது உடலின் பிற பகுதிகளில் தசை அசைவு ஏற்படும். அப்போது திடீரென உயரத்திலிருந்து விழுவது போன்ற உணர்வும் உண்டாகலாம். சிலருக்கு கனவில் கீழே விழுவது போல தோன்றும். இந்த அசைவு ஏற்பட்டவுடன் சிலர் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்வார்கள்.
வேலை, குடும்பம் அல்லது பிற பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கலாம். இதனால் சிலருக்கு திடீர் தசை அசைவுகள் அதிகரிக்கும். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த உணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். உயரத்திலிருந்து விழுவது போன்ற கனவுகள் சிலருக்கு மன அழுத்தம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம் என உளவியல் பார்வையில் கூறப்படுகிறது.
தினமும் முடிந்தவரை ஒரே நேரத்தில் தூங்கச் சென்று, ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.மெதுவான சுவாசப் பயிற்சி நல்ல தூக்கத்தை தூண்டும். தூக்கத்தில் கீழே விழுவது போன்ற உணர்வு எப்போதாவது வருகிறது என்றால் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. ஆனால் இந்த உணர்வுகள் அடிக்கடி ஏற்பட்டு தூக்கத்தைத் தொடர்ந்து பாதித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க : டீ குடிப்பதை ஒரு மாதம் நிறுத்திப் பாருங்கள்.. உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்!

