‘i am not a robot’ என்று ஏன் கிளிக் செய்ய வேண்டும்? கேப்ட்சா பின்னணியில் உள்ள ரகசியம்!

நீங்கள் ஏதாவது இணையதளத்தில் நுழையும்போதோ, கணக்கில் உள்நுழையும்போதோ, படிவத்தை நிரப்பும்போதோ ‘i am not a robot’ என்ற வார்த்தையை கவனித்திருப்பீர்கள். அதை கிளிக் செய்தால் போக்குவரத்து விளக்குகள், பேருந்துகள், மிதிவண்டிகள் போன்றவை உள்ள படங்களைத் தேர்ந்தெடுக்க சொல்லும். இது எதற்காக என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இப்பொது தெரிந்து கொள்ளுங்கள்.

கேப்ட்சா என்றால் என்ன?

கேப்ட்சா என்பது Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகும். இணையதளத்தைப் பயன்படுத்துபவர் மனிதரா அல்லது தானாகச் செயல்படும் பாட்களா (bots) என்பதை இது கண்காணிக்கும். ஏனென்றால் சில ஆபத்தான பாட்கள் போலிக் கணக்குகளை உருவாக்கவும், தேவையற்ற விளம்பரச் செய்திகளைப் பரப்பவும், இணையதளங்களைத் தாக்கவும் பயன்படுத்தப்படலாம்.

‘i am not a robot’ என்பதை எப்படிச் சோதிக்கிறது?

‘i am not a robot’ என்ற பெட்டியைக் கிளிக் செய்யும் போது போக்குவரத்து விளக்கு, பேருந்து, மிதிவண்டி அல்லது நடைபாதை போன்ற குறிப்பிட்ட பொருட்கள் உள்ள படங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லும். பழைய கேப்ட்சா முறைகளில் வளைந்த அல்லது தெளிவற்ற எழுத்துகளையும் எண்களையும் அடையாளம் கண்டு உள்ளிட வேண்டும். இதை தேர்வு செய்வது மனிதர்களுக்கு எளிது. ஆனால் பாட்களுக்கு கடினம். எனவே தான் இந்த சோதனை பின்பற்றப்படுகிறது.

கேப்ட்சா இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

இணையதளங்களில் கேப்ட்சா இல்லாவிட்டால், ஒரே நேரத்தில் ஏராளமான போலிக் கணக்குகளை உருவாக்க முடியும். இதனால் கமெண்ட் பகுதிகளில் போலியான லிங்க், விளம்பரங்கள் மற்றும் ஸ்பேம் செய்திகள் அதிகளவில் உருவாகும். அதிகப்படியான தானியங்கி கோரிக்கைகள் இணையதளத்தின் வேகத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். இணையவழி கருத்துக்கணிப்புகள் மற்றும் பிற செயல்பாடுகளில் போலியான பங்கேற்பு அதிகரிக்கும்.

இதையும் படிங்க : CDN என்றால் என்ன? இணையதளங்களுக்கு CDN ஏன் அவசியம்?

மீண்டும் மீண்டும் கேப்ட்சா ஏன் வருகிறது?

சில நேரங்களில் சரியான படங்களைத் தேர்ந்தெடுத்த பிறகும் கேப்ட்சா மீண்டும் வருவதை பார்த்திருப்பீர்கள். குறுகிய நேரத்தில் ஒரே இணையதளத்தைப் பலமுறை அணுகினால், பாதுகாப்பு அமைப்பு கூடுதல் சோதனையை கேட்கும்.

ஒரே இணைய முகவரியைப் பலர் பயன்படுத்துவது அல்லது சில வி.பி.என். இணைப்புகள் பயன்படுத்தும்போது இந்த கேப்ட்சா சோதனை மீண்டும் வரும். இணையதளத்தின் பாதுகாப்பு அமைப்பு வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கேப்ட்சா கண்டறிந்தால் இது போன்ற நடத்தும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial