CDN என்றால் என்ன? இணையதளங்களுக்கு CDN ஏன் அவசியம்?

What is a CDN? : இன்றைய டிஜிட்டல் உலகில் இணையதளத்தின் வேகம் மிகவும் முக்கியம். ஒரு இணையதளம் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால், வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு சென்று விடுவார்கள். குறிப்பாக செய்தி இணையதளங்கள், இ-காமர்ஸ் தளங்கள், வீடியோ தளங்கள் போன்ற அதிக பார்வையாளர்களைக் கொண்ட இணையதளங்களுக்கு வேகம் மிக முக்கியம். இதற்கு CDN அவசியமாகிறது.

CDN என்றால் என்ன?

CDN என்பது Content Delivery Network என்பதன் சுருக்கமாகும். பொதுவாக ஒரு இணையதளத்தின் தகவல்கள் ஒரு சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த இணையதளத்தை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமானோர் ஒரே நேரத்தில் திறக்கும் போது, அந்த ஒரே சர்வருக்கு அதிக அழுத்தம் ஏற்படும். CDN பயன்படுத்தப்படும் போது, பயனருக்கு அருகில் உள்ள சர்வர் மூலம் தகவல்கள் வேகமாக திறக்கும்.

CDN எப்படி வேலை செய்கிறது?

உதாரணமாக, ஒரு இணையதளத்தின் முக்கிய சர்வர் இந்தியாவில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த தளத்தை சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவில் உள்ள பயனர்கள் திறக்கும்போது, ஒவ்வொரு முறையும் இந்தியாவில் உள்ள ஒரே சர்வரில் இருந்து அனைத்து தகவல்களையும் பெற வேண்டிய அவசியம் இருக்காது. அருகிலுள்ள CDN சர்வர், ஏற்கனவே சேமித்து வைத்துள்ள படங்கள், CSS, JavaScript போன்ற கோப்புகளை பயனருக்கு விரைவாக அனுப்பும். இதன் மூலம், இணையதளத்தின் வேகம் பலமடங்கு அதிகரிக்கும்.

இணையதள வேகத்தை CDN எப்படி அதிகரிக்கிறது?

ஒரு இணையதளத்தில் பெரிய அளவிலான படங்கள், வீடியோக்கள் இருந்தால், அவற்றை ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படம். CDN இந்த சிக்கலை குறைக்க உதவுகிறது. பயனரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சர்வர் மூலம் உள்ளடக்கங்கள் வழங்கப்படுவதால், இணையதள பக்கங்கள் வேகமாக திறக்கும். வேகமான இணையதளம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். குறிப்பாக மொபைல் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும்.

அதிக டிராஃபிக் வரும் இணையதளங்களுக்கு என்ன பயன்?

செய்தி இணையதளங்களில் முக்கியமான ஒரு செய்தி வெளியாகும்போது, ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரே நேரத்தில் அந்த பக்கத்தை திறக்கலாம். இவ்வாறு அதிக டிராஃபிக் வரும் போது, சர்வர் செயலிழக்காமல் வேகமாக செயல்படும். இதன் காரணமாக செய்தி நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தளங்கள் CDN சேவையை பயன்படுத்துகின்றன

CDN பாதுகாப்புக்கும் உதவுமா?

ஆம். பல CDN சேவைகள் இணையதள பாதுகாப்பிற்கான கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன. உதாரணமாக, ஒரே நேரத்தில் அதிகமான கோரிக்கைகள் அனுப்பி இணையதளத்தை செயலிழக்கச் செய்ய முயலும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க சில தொழில்நுட்ப வசதிகள் CDN மூலம் கிடைக்கலாம். மேலும் சந்தேகத்திற்கிடமான டிராஃபிக்கை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வசதிகளும் சில சேவைகளில் உள்ளன.

ஆனால் CDN பயன்படுத்துவதால் மட்டுமே ஒரு இணையதளம் முழுமையாக பாதுகாப்பாகிவிடும் என்று கூற முடியாது. பாதுகாப்பான ஹோஸ்டிங், SSL, மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம்.

CDN மூலம் யாருக்கு அதிக நன்மை?

செய்தி இணையதளங்கள், இ-காமர்ஸ் தளங்கள், படங்கள் மற்றும் வீடியோ தளங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அதிக டிராஃபிக், உலகளாவிய வாசகர்கள் மற்றும் வேகமான இணையதள அனுபவம் தேவைப்படும் தளங்களுக்கு CDN பெரிய பலன் தரும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular