பீகாரில் ஓடும் ரயிலில் இருந்து கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை, ரயில் ஜன்னல் வழியாகப் பயணிகள் பிடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள சிவநாராயண்பூர் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர், பயணிகளிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது ரயிலுக்குள் இருந்த பயணிகள், அந்த நபர் தப்பிச் செல்லாமல் இருக்க, ஜன்னல் வழியாக அவரது கையைப் பிடித்துக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் அவரது கையை விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த நபர் நடைமேடையில் விழுகிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளது. திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொள்வது சரியா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
செல்போன் திருடப்பட்டிருந்தாலும், சந்தேக நபரைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தி ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைப்பதே சட்டப்படி நடவடிக்கை. இப்படி ஜன்னலில் தொங்கவிடுவது கடுமையான காயம் அல்லது உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம் என சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

